தேன்கனிக்கோட்டை, ஜூன் 15: தேன்கனிக்கோட்டை அருகே, விவசாயிகளின் ஆடுகளை நாய்கள் கூட்டம் கடித்து குதறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவி சாமிபுரம், தண்டரை, அளேநத்தம், மல்லசந்திரம், கங்கரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள், பட்டியில் புகுந்து அங்கு கட்டி வைத்த ஆடுகளை கடித்து குதறி உள்ளது. அடவிசாமிபுரம் கிராமத்தில் முனிரத்னம்மா என்பவருடைய 9 ஆடுகள், வெங்கடப்பா என்பவருடைய 5 ஆடுகள், சித்தப்பாவின் 2 ஆடுகள், ராஜப்பா என்பவருடைய 5 ஆடுகள், ஈசாக் என்பவரின் 5 ஆடுகள், முத்தப்பாவின் 3 ஆடுகள், தண்டரை கிராமத்தில் சின்னமுனியப்பாவின் 5 ஆடுகள், அளேநத்தம் பகுதியில் முனியப்பாவின் 4 ஆடுகள், மல்லசந்திரம் கிராமத்தில் லகுமாவின் 2 ஆடுகளை நாய்கள் கடந்த சில நாட்களாக கடித்து குதறி உள்ளது. இதில், முனிரத்தினம் என்பவரது இரண்டு ஆடுகள் இறந்து விட்டன.
இந்த நாய்களுக்கு பயந்து தண்டரை கிராமத்தை சேர்ந்த சென்னாமுனியப்பா என்பவர், தனது பட்டியில் 100 ஆடுகளை வைத்திருந்தார். இந்த நாய்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் 95 ஆடுகளை விற்று விட்டார். கடந்த ஆண்டு, சிறுத்தை ஒன்று ஆடுகளையும், நாய்களை கடித்துக் கொன்று வந்தது. பின்னர், வனத்துறையினால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. தற்போது, நாய்கள் தொல்லையால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
