அரசு நிதியை உடனடியாக விடுவித்து அவதானப்பட்டி படகு இல்லத்தை விரைந்து மேம்படுத்த நடவடிக்கைபடகு போட்டிகள் நடத்த வலியுறுத்தல்

 

கிருஷ்ணகிரி, ஜூன் 16: தமிழக அரசு நிதியை உடனடியாக விடுவித்து, கிருஷ்ணகிரி அவதானப்பட்டி படகு இல்லத்தை விரைந்து மேம்படுத்தி, படகு இல்லத்தில் ஆண்டுக்கு ஒருமுறை படகு போட்டிகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்களின் பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்கா, கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளது. இந்த இடங்களில் வார விடுமுறை நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், அணையின் மேல்பகுதியில் உள்ள மீன் கடைகளுக்கு குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்று மீன்கள் மற்றும் மீன் குழம்புடன் சாப்பாடு ஆகியவற்றை வாங்கி உண்டு மகிழ்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிற்கு சென்று, அங்குள்ள சரக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் தங்கள் குழந்தைகளை அமர வைத்து, விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அவதானப்பட்டி ஏரிக்கரையில், 15 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2005ம் ஆண்டு ரூ.77 லட்சத்தில் சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. சிறுவர் பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தனி இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை ஒட்டி உள்ள ஏரியில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 10 முதல் 15 அடி வரை ஆழம் கொண்டது. இங்கு 5 பெடலிங் படகுகள், 1 துடுப்பு படகு, 1 இயந்திர படகுகள் உள்ளன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், கிருஷ்ணகிரி வழியாக சேலம், மதுரை, கோயம்புத்தூர், கேரளா மாநிலத்திற்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்களும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சிறுவர் பூங்கா, படகு இல்லத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, அவதானப்பட்டி படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். எனவே, தமிழக அரசு நிதியை உடனடியாக விடுவித்து, உடனடியாக விரைந்து படகு இல்லத்தை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் வருகையினை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நகர மக்களுக்கு பொழுது போக்கிற்காக உள்ள ஒரு சில இடங்களில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் படகு சவாரி செய்ய முடியும்.

தற்போது அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல், ஏரியில் ஆண்டிற்கு ஒருமுறை படகு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,’ என்றனர்.

Related Stories: