கோவா, உத்தரகாண்ட், குஜராத், அசாமை போன்று பாஜக ஆளும் ம.பி-யிலும் பொது சிவில் சட்டம்; ஆலோசனை கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டமானது (யூசிசி) தற்போது கோவா, உத்தரகாண்ட், குஜராத் மற்றும் அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் உள்ளது அல்லது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்கள் ஏற்கனவே சட்டத்தை அமல்படுத்திவிட்ட நிலையில், மற்றவை அதற்கான இறுதி கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை (யூசிசி) அமல்படுத்த முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக உத்தரகாண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருஜன் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் மட்டுமே பங்கேற்றன. காங்கிரஸ், பிஎஸ்பி, சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

இம்மாத இறுதிக்குள் அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் சட்ட வரைவு தயாராகிவிடும் என்றும், வரும் ஜூலை 20ம் தேதி தொடங்க உள்ள சட்டசபைக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களை (என்ஆர்ஐ) மணக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் திருமணத்தைப் பதிவு செய்வதுடன், ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட்டுடன் இணைக்க வேண்டும். ‘லிவ்-இன்’ உறவுகளைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

பழங்குடியின மக்களை இந்தச் சட்டத்திலிருந்து விலக்கி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்தன. இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிட்டு பட்வாரி, ‘மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைப் பேசுவதை விடுத்து, இதுபோன்ற சட்டங்களை அரசு கொண்டு வருகிறது’ என்று சாடினார். போபால் நகர காஜி சையத் முஷ்டாக் அலி கூறுகையில், ‘தனிநபர் சட்டங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது. ஒருபுறம் பழங்குடியினரை விலக்கி வைத்துவிட்டு, மறுபுறம் இது பொதுவான சிவில் சட்டம் என்று கூறுவது எப்படிச் சரியாகும்’ என்று கேள்வி எழுப்பினர்.

Related Stories: