சர்வதேச யோகா தினத்தில் பாஜக முதல்வரின் மனைவி நடிகையை அவமதித்தாரா?: சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்

மும்பை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரம்மாண்ட பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவியான வங்கி அதிகாரி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் அவரது மகள் திவிஜா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்மொழி நடிகையாக வலம் வரும் லீலாவும் பங்கேற்றார்.

அப்போது அங்கிருந்த ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள், அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். இந்நிலையில் அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், அம்ருதா பட்னாவிஸ் மற்றும் அவரது மகளை மட்டும் தனியாகப் புகைப்படம் எடுக்க விரும்புவதாக மராத்தி மொழியில் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அம்ருதா பட்னாவிஸ், நடிகை லீலாவைச் சற்று தள்ளி நிற்குமாறு கேட்டுக்கொண்டார். உடனே ஸ்ரீலீலாவும் சிரித்தபடியே அந்தப் புகைப்படச் சட்டத்தில் இருந்து நகர்ந்து செல்ல, அம்ருதாவும் திவிஜாவும் மட்டும் இணைந்து போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் முதல்வரின் மனைவி அம்ருதா, நடிகை லீலாவை அவமதித்துவிட்டதாக ஒரு தரப்பினரும், அவர் புகைப்படக் கலைஞரின் விருப்பத்திற்கேற்பவே அவ்வாறு செயல்பட்டதாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories: