டெல்லியில் வீசிய கடும் புழுதிப் புயலால் மக்கள் அவதி

டெல்லி: டெல்லியில் வீசிய கடும் புழுதிப்புயலால் மக்கள் அவதியடைந்திருக்கிறார்கள். டெல்லியில் குருகிராம் பகுதியில் புழுதிப் புயல் வீசியிருக்கிறது. புழுதி கலந்த பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரிலும் புழுதிப்புயல் வீசி வருகிறது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), பலத்த காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புழுதிப் புயலைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று மதியம் 2:30 மணியளவில், பலத்த காற்று பார்வைத்திறனை குறைத்ததால் வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கைகளை விடுத்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில், டெல்லி-என்சிஆர் பகுதி முழுவதும், ஹரியானா , உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளுடன் சேர்த்து, இந்த வானிலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி-என்சிஆர் பகுதியில் மணிக்கு 50-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மணிக்கு 100 கி.மீ வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானாவில் உள்ள மெஹம், சோனிபட், ரோஹ்தக், கார்கோடா, பிவானி மற்றும் சார்க்கி தாத்ரி; உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத், கேக்ரா, பிலகுவா, சிகந்திராபாத்; ராஜஸ்தானில் உள்ள அல்வார், பிவாடி, திஜாரா, டீக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டிற்குள் இருக்கவும், பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், மற்றும் அதிக காற்று வீசும் நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: