பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் செய்யாற்று படுகையில் மணல் குவித்து இரவில் மாட்டு வண்டிகளில் கடத்தல்

*போலீசுக்கு மாமூல் தருவதாக கூறி ஆளும் கட்சியினர் வசூல் வேட்டை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் செய்யாற்று படுகையில் மணல் குவித்து இரவில் மாட்டு வண்டிகளில் கடத்தப்படுகிறது. மேலும் போலீசுக்கு தருவதாக கூறி ஆளும் கட்சியினர் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் செய்யாற்றுபடுகை மற்றும் கமண்டல நாகநதி படுகை என 2 ஆற்று படுகைகள் ஒன்றாக கலக்கும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் மணல் வளம் எப்போதும் செழுமையாக காணப்படும். எனவே இப்பகுதியில் மாட்டு வண்டி வைத்திருக்கும் பெரும்பாலானோர் இரவு நேரங்களில் மணல் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது இந்த மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றத்தின் மூலமாக மீண்டும் மணல் கடத்தல் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதற்காக செய்யாற்று படுகையிலேயே மணல் குவித்து வைத்து இரவு நேரங்களில் உடனடியாக அள்ளிச்செல்கின்றனர்.

ஒரு சிலர் மணலை அங்கேயே ஜலித்து குவித்து வைத்து கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஜலித்து கடத்தப்படும் மணல் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.

ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர் மணல் கடத்தும் ஒரு மாட்டுவண்டிக்கு ரூ.200 வீதம் வசூல் செய்து, இதனை நாங்கள் காவல்துறைக்கு கொடுத்து விடுகிறோம் எனக்கூறி வருகிறார்களாம். இதனால் மணல் கடத்தல் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் மணல் கடத்தல்காரர்கள் தைரியமாக செயல்படுவதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க வேண்டும், போலீசார் யாராவது மாமூல் வசூலிக்கிறார்களா? என கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரமாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாமூல் வசூலித்தது யார்?

மணல் கடத்தல்காரர்களிடம் போலீசாருக்கு மாமூல் தருவதாக ஆளும்கட்சியினர் வசூல்வேட்டையில் ஈடுபடுவது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. அதன்படி மாமூல் வசூலித்த ஆளும் கட்சியை சேர்ந்த நபர்கள் யார்? போலீசார் யாருக்காவது உண்மையில் மாமூல் சென்றுள்ளதா? என ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தும் சிலரது பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் மணல் கடத்தல் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: