மதுரை – விருதுநகர் மாவட்ட எல்லையில் சிதிலமடைந்த பாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை – விருதுநகர் எல்லையில் உள்ள கொக்கலாஞ்சேரி கிராமத்தில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால பழமையான கோயில் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்டது கொக்கலாஞ்சேரி. மதுரை – விருதுநகர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், பிரேம் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழமையான கற்சிற்பங்கள், கட்டிடக் கூறுகளுடன் கூடிய ஒரு பழமைக் கோயில் சிதிலமடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கொக்கலாஞ்சேரியில் கண்டறிந்துள்ள பழமை கோயிலின் கட்டிட அமைப்பும், கலைமிகு சிற்பஅம்சங்களும் பாண்டியர் காலக் கட்டிடக்கலையை நினைவூட்டுகிறது. கோயில் சுற்றுச்சுவர், கருவறை பகுதிகளில் பாண்டியர் காலம் முதல் பிற்காலம் வரையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

பல கல்வெட்டுக்களின் வெவ்வேறு இடங்களில் ‘கோமாறப்பன்மரான’ என்ற வாசகம் வருகிறது. இதிலிருந்து ‘மாறவர்மன்’ என்றும், வேறொரு இடத்தில், ‘சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு எட்டாவது’ என வருவதால், இவ்விரண்டை இணைத்து, ‘மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது’ அறியமுடிகிறது.

இக்கோயிலின் கல்வெட்டுகளில் வெண்புநாடு, பூங்காநாடு, செங்குடிநாடு எனும் 3 நாடுகள் காண முடிகிறது. இம்மூன்று நாடுகளுமே அருகருகே அமைந்தவையாகும். இதன்மூலம் பல நிர்வாகப் பிரிவுகளுடன் கோயிலுக்கு தொடர்பிருந்ததும் அறிய முடிகிறது.

மேலும், பாண்டிய நாட்டின் உட்பிரிவுகளில் இக்கோயில் ‘செங்குடி நாட்டுப் புளியங்குடி’ எனும் உட்பிரிவில் இருந்துள்ளது. கல்வெட்டின் ஒரிடத்தில் ‘விக்கிரம பாண்டீச்சுரமுடையார்’ என்றும், மற்றோர் இடத்தில், ‘விண்ணகரம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரம பாண்டீச்சுரமுடையார் சிவன்கோயிலையும், விண்ணகரம் சொல் பெருமாள்கோயிலையும் குறிப்பனவாகும். கல்வெட்டுகளும் வெவ்வேறு கால்கட்டம் சார்ந்ததாக காண முடிகிறது. இதன்மூலம் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தெய்வங்கள் வைத்து வழிபட்டிருக்கலாம்.

கல்வெட்டு ஒன்றில் ‘காராண்மைத்தானம்’ என்றும், மற்றொரு கல்வெட்டில், ‘பிரமாணம் பண்ணிக்கொடுத்த ஊரோன்’ என்றும், ‘கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க” என்றும் வருவதால் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தான நிலங்கள் பற்றியும், கோயில் நிவந்தங்களுக்காக கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றியும் இது குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டுகளால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் கால ஓட்டத்தில் சிதைவடைந்த பின்னர் மீண்டும் 17, 18ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டு வழிபட்டு வந்துள்ளமையும் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

இக்கோயில் குறித்த விரிவான வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு, அதன் காலக்கட்டம், முக்கியத்துவத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தொல்லியல் துறையினர் உரிய நடவடிக்கைகளால் தொன்மை சிறப்புமிக்க இச்சின்னத்தை பாதுகாக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: