திருமயம் பகுதியில் தொடர் மழை நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்தன

*அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறல்

திருமயம் : திருமயம் பகுதியில் தொடர் மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்தன. இதனால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் காரணமாக மழை பருவத்திற்கு ஏற்றவாறு பெய்யாமல் விவசாயிகள், பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் எப்போது மழை வரும் என புரியாமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

அதாவது நீர் தேவைப்படும் போது கடும் வறட்சியும், நீர் தேவையில்லாத போது கன மழையும் பெய்வதால் விவசாயிகள் இந்த மாற்றத்தால் பெரும் இன்னல்களையும் பொருள் செலவுகளையும் சந்தித்து வருகின்றனர்.இதனிடையே திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரம் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்டத்திலேயே அதிகப்படியாக சுமார் 76 மில்லி மீட்டர் திருமயத்தில் மழையளவு பதிவானது குறிப்பிடத்தக்கது. இதனால் திருமயத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் மழை இல்லாதபோதும் வெயிலின் தாக்கமும் மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை இடியுடன் மீண்டும் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏற்கனவே சாய்ந்து கிடந்த நெற்பயிரிகள் மேலும் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: