லண்டன்: இங்கிலாந்து நாட்டில் 2 ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் ரயில் ஓட்டுநர் பலியானார். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கே ஃபெட்போர்ட்ஷையர் நகருக்கு தெற்கே செயின்ட் பான்கிராஸ் ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. படுகாயங்களுடன் 22 பேரும், சிறிய காயங்களுடன் 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
