சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 8: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. தமிழகத்தில் சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழக அளவில் அதிக வருவாய் ஈட்டும் கோயில்களில் 2வது இடம் வகிக்கிறது. இந்த கோயிலில் நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் முதன்மையான விழாவாக பக்தர்கள் கருதுவது பூச்சொரிதல் விழா. ஏன் என்றால் பூச்சொரிதல் விழா நடைபெறும் 28 நாட்களும் பக்தர்களின் நன்மைக்காக அம்பாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார். பச்சை பட்டினி விரதத்தின்போது அம்பாள் தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, இளநீர், பானகம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. நேற்று காலை 6 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வஜனம், அனுக்ஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காலை 6.45 மணிக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. முதலில் கோயில் நிர்வாகம் சார்பாக தெற்கு ரத வீதியில் இருந்து யானை மீது வைத்து ஊர்வலமாக பூ கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடைப்பயணமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் 2வது, 3வது, 4வது, 5வது பூச்சொரிதல் விழாக்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: