4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு; சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: இடைத்தேர்தல் நடைபெறுமா? தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரில் ராஜினாமாவையடுத்து காலியாகவுள்ள அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ராஜினாமா செய்த எல்எல்ஏக்கள் பதில்தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களையும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியன் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை அன்றைய தினமே சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது 3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது, அதனை தவிர்க்கும் வகையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா, என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. கட்சித் தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

எனவே, 3 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுக்களை விசாரித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதேபோல், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும். அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையாவையும் சேர்த்து ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கிரி ஆஜராகி, 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எந்த விசாரணையும் நடத்தாமல் சபாநாயகர் ஏற்றது அரசியலமைப்பு சட்ட சரத்துகளுக்கு முரணானது. மதியம் 2.30 மணிக்கு ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு தரப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் 4 எம்எல்ஏக்களுக்கும் தவெகவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு உடனடியாக ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே 4 தொகுதிகளும் காலி என்று தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார்களா அல்லது கட்டாயத்தின் பெயரில் ராஜினாமா செய்தார்களா, ராஜினாமா நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது. ராஜினாமா பின்னணி குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தவில்லை. நம்பிக்கை கோறும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரில் 21 பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தேவைவில்லை என்று வாதிட்டார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதிடும்போது, எதிர்க்கட்சி தலைவரே குதிரை பேரம் நடந்ததாக பேரவையிலேயே பேசியுள்ளார். 4 பேருக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று குதிரைபேரம் நடத்தினர். ராஜினாமா குறித்து விசாரணை நடத்த தேவையில்லை என்று சபநாயாகர் கூற முடியாது, ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது தன்னிச்சையானதா, நேர்மையானதா என ஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டார்.

சட்டமன்ற செயலாளர் சார்பில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, சபாநாயகர் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உரிய முறையில் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க மாட்டோம். சட்டமன்ற நடவடிக்கைகளில் குறிப்பிட்ட வரையறைக்குள்தான் தலையிட முடியும் என்றும், இதுகுறித்து சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர், ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதி தள்ளிவைத்தார்.

Related Stories: