ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்: பேரவையில் ஆளுநர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க நாம் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும். இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக பயன்படுத்தவும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

தேசிய கல்வி கொள்கையை கடைபிடித்தால் தான், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ரூ.3,458 கோடி நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் நிலைபாடு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை திணிப்பு, மும்மொழி கொள்கை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற தேவையான அனைத்து முயற்சிகளும் இந்த அரசு மேற்கொள்ளும்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்று தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லை பெரியாறு அணை பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

Related Stories: