போலீசார் விசாரணை அடிப்படை வசதி கோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த விஸ்வநாதபுரம் மக்களுடன் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

குளித்தலை, மார்ச் 8: அடிப்படை வசதி கோரி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த மருதூர் பேரூராட்சி விஸ்வநாதபுரம் என அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிகளம் பகுதி மக்களுடன் அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுமூக முடிவு ஏற்பட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி கையொப்பமிட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிகளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்..இந்த பகுதிக்கு இன்றுவரை உரிய சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்துதரப்படவில்லை எனவும் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர், முதல் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் விஸ்வநாதபுரம் பகுதிக்கு சென்ற குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர். அதன் பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு அமைதிபேச்சுவாரத்தைக்கு அப்பகுதி மக்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் துணை தாசில்தார் இந்துமதி, தேர்தல் தனி தாசில்தார் வைரப்பெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து அலுவலர்களும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மருதூர் பேரூராட்சி நிர்வாகத்தினரால் தங்கள் பகுதிக்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து சுமூகமான முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கையொப்பமிட்டனர்.

Related Stories: