ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன் (75). இவரது மகன் ஆனந்தன் (40). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு குடும்பப் பிரச்னை தொடர்பாக தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆனந்தன், இரும்புக் கம்பியை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருளப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருளப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
