திருவாரூர்: திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன்(48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம்தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார். அப்போது மற்றொரு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்த அடையாளம் தெரியாத 2 பேர், திடீரென வாஞ்சிநாதன் முகத்தில் ஆசிட்டை வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வாஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் வாஞ்சிநாதனின் பாலியல் தொல்லை காரணமாக இருக்குமா என விசாரணை நடத்தப்பட்டது. வாஞ்சிநாதன், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விளையாட்டு பயிற்சிக்காக வெளியூர் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பள்ளி படிப்பை முடித்து அந்த மாணவியும் கல்லூரி சென்று விட்டார். அப்போது எடுத்து வைத்த வீடியோவை காட்டி மாணவியை தொடர்ந்து மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தினால் தான் உடற்கல்வி ஆசிரியர் மீது ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினால் உண்மை சம்பவம் தெரிய வரக்கூடும் என்றனர்.
வீடு புகுந்து மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் ெதால்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், தனது தாயார் பராமரிப்பில் இருந்து வந்தார். தாயார் வேலைக்கு சென்று மகளை கவனித்து வந்தார். அவர் வேலைக்கு செல்லும் சமயங்களில், இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(54) என்பவர், வீடு புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வேலை முடிந்து வந்த தாயாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் தாயார், சூளகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன்பேரில், முருகனை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
