கோவை: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி (50). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் காது கேட்கும் கருவி யை (ஹியரிங் எய்ட்) தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பார்சலில் அனுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தினமும் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சத்தமாக குரல் கொடுத்து வந்தார். இப்போது அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், பெண்கள், பெற்றோர்கள் கதறல்கள் அவருக்கு கேட்கவில்லை.
அப்படி காது கேட்காமல் இருந்தால் நன்றாக கேட்கும் வகையில் ‘ஹியரிங் எய்ட்’ வாங்கி பார்சலில் அவரது பனையூர் இல்லத்தின் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். இந்த மெஷினை காதில் அவர் மாட்டினால் அவருக்கு காது நன்றாக கேட்கும். தமிழகத்தில் பெண்கள், சிறார்களின் கதறல்களை அவர் கேட்க முடியும். நடிகராகவோ அல்லது முதல்வராகவோ இதை காது கொடுத்து கேட்டு நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன்.
ஜனநாயகத்தின் முதல்தூண் சட்டமன்றம், நான்காவது தூண் பத்திரிகை. ஆனால் முதல்வர் பத்திரிகையாளர்களை கண்டு ெகாள்வதில்லை. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் திரும்பி பார்க்காமல் போய் விடுவார். இப்படி இருக்கும் முதல்வர் நடுநிலையோடு மக்களுக்கு பணியாற்ற முடியுமா? அவரின் காது நன்றாக கேட்க இந்த ‘ஹியரிங் எய்ட்’ மெஷின் துணையாக இருக்கும். அப்போதாவது அவர் நடவடிக்கை எடுப்பார் என கருதுகிறேன்,’’ என்றார்.
