100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, மார்ச் 8: தூத்துக்குடியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி ரோச் பூங்காவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ரங்கோலி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்போம் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மின்சார வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் நாள் ஏப்ரல் 6 போன்ற விழிப்புணர்வு சீல் வைத்து வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.

 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தற்போதே உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?, வாக்களிக்க வேண்டிய வாக்குசாவடி எங்கு உள்ளது என்பது குறித்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவதற்கு முன்பு கையுறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குசாவடி மையத்துக்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் மற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 6ம் தேதி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குபதிவு நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், சப்-கலெக்டர்(பயிற்சி) சதீஷ்குமார், கூட்டுறவு காய்கறி விற்பனை அங்காடி நிர்வாக இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், தாசில்தார் ஜஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: