சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் தேரடி வீதியில் கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில், பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், வாக்காளர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கலெக்டர் ஜான்லூயிஸ், முதல் நபராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மேலும் ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான, அமைதியான முறையில் தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என வாக்காளர் உறுதிமொழியை, கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட துணை தேர்தல் அலுவலர் பிரியா, மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீதர், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: