அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

 

திருப்புத்தூர், ஜூன் 16: திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மன்ற துவக்கவிழா, அரசு பொதுத் தேர்வில் நூறு சதவிகிதம் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்திக்காட்டிய ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டு விழா, உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு உறுதிமொழி என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரவீந்திரன், மாவட்ட பசுமைத் தோழர் சர்மிளா, பள்ளி மேலாண்மைக்குழுத் துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி ஆசிரியர் பாண்டியன் வரவேற்றார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ சீனிவாசசேதுபதி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு உறுதிமொழி மாணவர்களுடன் ஏற்றுக்கொண்டு தேர்ச்சி சதவிகிதம் உயர்த்திக் காட்டியதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற போதை ஓழிப்பு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். விழாமுடிவில் ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: