×

4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி அதிமுக வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தின் 17வது சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை அன்றைய தினமே சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது, அதனை தவிர்க்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. கட்சித்தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

எனவே, மூன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இந்த வழக்கில் நாங்களும் இணைந்து கொள்ள மனு தாக்கல் செய்துள்ளோம். மேலும், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையாவையும் சேர்த்து ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தாமாக தான் முன்வந்து ராஜினாமா செய்தார்கள். இதுகுறித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளளார். சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை நீதிக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : ICourt ,Chennai ,Supreme Court of Chennai ,Chennai High Court ,17th ,Assembly ,of Tamil Nadu ,
× RELATED சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு...