×

நாமக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: கட்சியின் பிரசார பாடலால் சர்ச்சை

​நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டு, தவெக கட்சியின் பிரசார பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே களங்காணியில், ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்று, கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், கலெக்டர் மதுபாலன், எம்எல்ஏ திலீப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழா துவங்கும் முன்பு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தவெகவின் பிரசார பாடலான ‘உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென…’ என துவங்கும் பாடல் இடைவிடாமல் ஒலித்தது. அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்பும், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மீண்டும் பிரசார பாடலே ஒலித்தது. இந்த பாடலை அமைச்சர் ரசித்தபடி காரில் ஏறிச்சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

​அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் தான், நிகழ்ச்சி நிரல் துவங்கும். இது தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், மாறாமல் இருக்கும் நடைமுறையாகும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்ட விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Namakkal ,​Namakkal ,minister ,Thaveka party ,Kalangani ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த...