×

மணல் திருட்டின்போது பறிமுதல் செய்த டிராக்டரை ஓட்டி வந்தபோது அரசு பஸ் மோதி ஏட்டு பலி: முதல்வர் ரூ.30 லட்சம் நிதியுதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே தேர்போகி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் திருட்டு நடப்பதாக தகவலறிந்து தேவிப்பட்டினம் எஸ்ஐ சுந்தரமூர்த்தி, ஏட்டு மகேஷ்குமார் (41) உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 3 டிராக்டர்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரைப் பார்த்ததும் தப்பியோடினர்.

போலீசார் விரட்டியதில் 2 டிராக்டர் டிரைவர்கள் சிக்கினர்.
ஒருவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பினார். 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. டிரைவர் இல்லாத டிராக்டரை காவல் நிலையத்துக்கு ஏட்டு மகேஷ்குமார் ஓட்டி வந்தார். கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்தபோது, நாகர்கோவிலில் இருந்து ராமநாதபுரம் வழியாக வேளாங்கண்ணி சென்ற அரசு விரைவு பஸ், டிராக்டர் மீது மோதியது. இதில் ஏட்டு மகேஷ்குமார் உயிரிழந்தார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

அதில் டிரைவர்களான தூத்துக்குடி பட்டுராஜா (43), கன்னியாகுமரி மாவட்டம், மணக்கரை கிருஷ்ணன் (55) உட்பட 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்வர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், பலியான ஏட்டு மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ்குமார் உடலுக்கு அமைச்சர் ராஜீவ், கலெக்டர் சிவகுரு பிரபாகரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கண்கள் தானம்
விபத்தில் பலியான மகேஷ்குமார், முதுகுளத்தூர் அருகே பிரப்பக்களூர் கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் வாகன டிரைவராக இருந்த இவர், தற்போது தேவிப்பட்டினத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். அவரது 2 கண்களும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Tags : Chief Minister ,Ramanathapuram ,Therbogi ,Devipattinam ,Ramanathapuram district ,SI ,Sundaramoorthy ,Mahesh Kumar ,
× RELATED தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத...