×

நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை 15ம் தேதிக்குள் வெளியிட அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். நிதி பிரச்னை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியிட 2023ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி அளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதியளித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இந்த மனு மீது ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : Vikram ,Chennai ,Gautham Vasudev Menon ,Madras High Court ,Punniamoorthy ,Premkumar ,
× RELATED தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத...