×

தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசியல் மதம் மற்றும் சித்தாந்த ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேலூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாமராஜ் வித்யாலயா தொடக்கப்பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று, பதில்மனு தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த...