மதுரை: மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்தி தவெக எம்எல்ஏக்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்க தலைவர் வீரபாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
முறையான அனுமதி பெற்று, தமிழ்நாடு முழுவதும் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறோம். தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரிலும், யூடியூப் இன்புளூயன்சர்கள் என்ற பெயரிலும் மனமகிழ் மன்றத்திற்குள் வந்து சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தரித்து அங்கு மது அருந்தி கொண்டிருப்பவர்களை வீடியோ ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை வைத்து மனமகிழ் மன்ற உரிமையாளரிடம் பணம் கேட்டும் மிரட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி மற்றும் திருச்சி மாவட்டத்திலும் உள்ள மனமகிழ் மன்றங்களின் உள்ளே நுழைந்து ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் தேவையற்ற கேள்விகளை கேட்டு பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால் எங்களின் தொழில் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, மனமகிழ் மன்ற உரிமையாளரின் உரிமைகளை பாதுகாக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அதிகாரிகள் சட்டப்படி ஆய்வு செய்யலாம். ஆனால், ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி யூடியூபர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரால் ஆய்வு செய்ய முடியாது. எம்பி, எம்எல்ஏக்களாக இருந்தாலும் அதிகாரிகள் மூலம் தான் தீர்வு பெற முடியும். அவர்களாகவே சட்டத்தை கையில் எடுத்து ஆய்வு செய்ய முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளால், பெரும் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இதுபோன்று அரசியல்வாதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளதா என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
