தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மகிழ்ச்சி

ஈரோடு, மார்ச் 7: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின் காரணமாக எஸ்.ஐ.,க்கள் ஈரோடு மாவட்டத்திற்குள்ளே பணியிடம் மாற்றம் செய்யப்பட உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 116 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என 69பேர் பணியிடம் மாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த 69பேரும், முதற்கட்டமாக 23பேரும், இரண்டாம் கட்டமாக 9பேர் என 32 எஸ்.ஐ.,க்கள் பணியிடம் மாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டார். ஆனால், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 32பேரும் பணியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிதாக ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், எஸ்.ஐ.,க்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கு பதிலாக, மூன்று ஆண்டு ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுரிமை உள்ள தொகுதியில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் மாவட்டத்துக்குள் அல்லது சப்-டிவிசனுக்குள் பணியிட மாற்றம் செய்தால், போதுமானது என அறிவித்தது. இந்த உத்தரவினால், வேறு மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட இருந்த எஸ்.ஐ.,க்கள் ஈரோடு மாவட்டத்திலேயே மாற்றம் செய்யப்பட உள்ளதையொட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>