பள்ளி சுவற்றில் வரையப்பட்டிருந்த தேசத்தலைவர்கள் படங்கள் அழிப்பு

ஈரோடு, மார்ச் 7:   ஈரோட்டில் பள்ளி சுவற்றில் வரையப்பட்டிருந்த தேசத்தலைவர்கள் படங்கள் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி அழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவற்றை மறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் சுற்றுச்சுவர்களில் தேசத்தலைவர்களின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில், அவர்களின் படங்கள் அருகிலேயே அவர்கள் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள், கருத்துக்கள் ஆகியவை எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் சுவர்களில் வரையப்பட்டிருந்த தேசத்தலைவர்களின் படங்கள் தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி மாநகராட்சி ஊழியர்கள் அழித்து அவமதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் வள்ளிநாராயணன் கூறியதாவது: தேர்தல் விதிமுறைகள் படி அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், சிலைகளை மறைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நாட்டிற்காக பாடுபட்ட காந்தி, அப்துல்கலாம், காமராஜர், நேரு போன்ற தலைவர்களின் படங்கள் பள்ளி சுற்றுச்சுவர்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள தலைவர்களின் உருவப்படங்களை மறைக்கும் வகையில், சுண்ணாம்பை கரைத்து ஊற்றி தலைவர்களுக்கு அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கதக்கது. எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: