அம்மா சிமெண்ட் இனிமேல் 25 மூட்டை தான் கிடைக்கும்

பொதுமக்கள் அதிர்ச்சி

கம்பம், மார்ச் 7: தமிழக அரசு சார்பில் வீடு பழுது பார்க்கும் பொதுமக்களுக்கு அம்மா சிமெண்ட் என்ற பெயரில் சலுகை விலையில் பத்து முதல் நூறு மூட்டை சிமெண்ட் வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்ட்டு ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் வீட்டு பத்திரம் நகல், ஆதார் கார்டு இணைத்து மனுச்செய்தால் மூப்பு அடிப்படையில் சிமெண்ட் வழங்கப்படும். வெளிமார்க்கெட்டில் 400 ரூபாய் வரை சிமெண்ட் விற்கப்படும் நிலையில், அம்மா சிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலும் அம்மா சிமெண்டை விரும்பி வாங்கினர்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி முதல் 190 ரூபாயிலிருந்து 216 ரூபாயாக அம்மா சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இனிமேல் அம்மா சிமெண்ட் விண்ணப்பிக்கும் போது வருட வருமானம் மூன்று லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும், அதற்கான சான்றிதழை இணைக்கவும் புதிய விதிகளை அரசு விதித்துள்ளது. அதேபோல் முன்பு  நூறு மூட்டை வரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது 25 மூட்டை மட்டுமே வழங்கப்படும் என்றும், அதற்காக  டி.டி எடுத்து அனுப்பினால் மட்டுமே லோடு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பசுமை வீடு கட்டுவோருக்கும், ஐஎச்எச்எல் திட்டத்தின் கீழ் தனி நபர் கழிப்பறை கட்டுபவர்களுக்கும் வருமான சான்றிதழ் தேவையில்லை. ஏற்கனவே கடந்த ஆறுமாத காலமாக பொதுமக்களுக்கு அம்மா சிமெண்ட் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது அதிக கெடுபிடிகளுடன் சிமெண்ட் மூட்டை எண்ணிக்கையை குறைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: