வருசநாடு அருகே வனத்துறை அதிகாரிகளை கண்டித்து மூன்று மணி நேரமாக மக்கள் முற்றுகை விவசாய டீசல் மோட்டார்களை அகற்ற எதிர்ப்பு

வருசநாடு, மார்ச் 7: கடமலை-மயிலை ஒன்றியத்தில்  கண்டமனூர், வருசநாடு, மேகமலை ஆகிய 3 வனச்சரகங்களாக  பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் மஞ்சனூத்து, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், நொச்சியோடை வெள்ளிமலை, குழிக்காடு உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த வன கிராமங்களில் பீன்ஸ்,எலுமிச்சை, தக்காளி, அவரை,  பூசணி, இலவம், கொட்டைமுந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 4ம் தேதி தேனி மாவட்ட வன உயிரின துணை காப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வருசநாடு மற்றும் மேகமலை வனத்துறை அதிகாரிகள் அரசரடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்களிடம் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள டீசல் மோட்டார்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்குள் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து டீசல் மின்மோட்டார்களை அகற்றி அதனை சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஆனால் டீசல் மோட்டார்களை அப்புறப்படுத்த மலைக்கிராம மக்கள் முன்வரவில்லை. இந்த நிலையில் தேனி மாவட்ட வன உயிரின துணை காப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வனச்சரகர்கள் ஆறுமுகம், சதீஷ்கண்ணன் மற்றும் மேகமலை, வருசநாடு ஆகிய வனச்சரகர்களை சேர்ந்த வனத்துறையினர் நேற்று மலைக்கிராமங்களில் உள்ள டீசல் மோட்டார்களை அகற்றுவதற்காக சென்றனனர். அவர்களுடன் கடமலைக்குண்டு போலீசாரும் சென்றனர்.

இந்த தகவலையறிந்த மலைக்கிராம மக்கள், மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார், வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலங்களில் டீசல் மோட்டார்களை அகற்றினால் மலைக்கிராத மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, டீசல் மோட்டார்களை அகற்றும் பணிகளை வனத்துறையினர் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என மலைக்கிராம பொதுமக்கள் எச்சரித்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் கூறுகையில், ``மூன்று தலைமுறையாக வனத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். திடீரென வனத்துறை அதிகாரிகள் மலைக்கிராம பொது மக்களை வெளியேற்ற நினைப்பது வேதனையளிக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. மேலும் மலைக்கிராம பொதுமக்களை வெளியேற்ற நினைக்கும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு தேனி மாவட்ட கலெக்டரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். நாங்கள் மூன்று தலைமுறையாக மலைக்கிராங்களில் வாழ்ந்து வருகிறோம். எங்களை வனத்துறை அதிகாரிகள் வெளியேற்ற நினைத்தால் தற்கொலை செய்து கொள்வோம்’’ என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி வனத்துறை அதிகாரிகள் மேகமலைக்கு செல்லாமல் வருசநாடு வனப்பகுதிக்கு சென்றனர். இதனால் போராட்டத்தில் கலந்து கொண்ட மலைக்கிராம மக்கள் கலைந்து சென்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தால் மஞ்சனூத்து பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: