போடியில் பறிமுதல் செய்த மணல் லாரிகள் விடுவிப்பு கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்

தேனி, மார்ச் 7:  போடியில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் விடுவிக்கப்பட்டது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமான பணிகளுக்கான மணல் தேவைக்காகவும், தூசு மணல்களை அப்புறப்படுத்தவும் மணல் குவாரிகள் நடத்த ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி வாகனத் தணிக்கையின்போது,  போடி ராசிங்காபுரம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்து அனுமதி பெறாமல் முறைகேடாக 7 டிப்பர் லாரிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இந்த லாரிகளை போடி தாசில்தார் பறிமுதல் செய்ததோடு, போலீசுக்கும் தகவல் அளித்துள்ளார். இத்தகவலை போடி தாசில்தார் மேலதிகாரிகளுக்கு தகவல் தராத நிலையில், திடீரென லாரிகள் மீது போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இதில் அரசியல் தலையீடு இருக்கும் என தெரியவருகிறது. எனவே, முறைகேடாக மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் மீது நடவடிக்கையும், நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

Related Stories: