அடுத்தடுத்து விலை உயர்வுக்கு மத்தியில் உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைப்பு: ஏழை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி

புதுடெல்லி: வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட நிலையில், உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 4 ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இது ஏழை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசியாவில் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி விட்ட ஒன்றிய அரசு, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை கடந்த மார்ச்சிலிருந்து 2 முறை, மொத்தம் ரூ.89 அளவுக்கு உயர்த்தி விட்டது.

இதனால் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.942 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்களே சிலிண்டர் வாங்க திணறும் நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக அவர்களுக்கான மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 4 ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியமாக வழங்கப்படுகிறது. ஆனாலும், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஒரு சிலிண்டருக்கு ரூ.642 செலுத்த வேண்டியிருக்கிறது. இதுவே ஏழை பயனாளிகளுக்கு சுமையாக இருக்கும் நிலையில், உஜ்வாலா மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9 ஆக இருந்த நிலையில் அதை 4 ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

இத்திட்டம் கடந்த 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டு தற்போது 4 ஆக சுருக்கப்பட்டுள்ளது. இந்த 4 சிலிண்டர்களுக்குப் பிறகு ஏழை மக்கள் சந்தை விலையான ரூ.942க்கு சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் வீட்டு பட்ஜெட்டை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.

இது குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன் கனூஜா கூறுகையில், ‘‘உஜ்வாலா திட்ட பயனாளிகளின் ஆண்டு சராசரி சிலிண்டர் நுகர்வை அடிப்படையாக வைத்தே மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே உஜ்வாலா பயனாளிகளுக்கு 4 சிலிண்டர்கள் அவர்கள் ஆண்டு தேவைக்கு போதுமானதாக இருக்கும்.

அவர்கள் ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1200 மானியமாக பெறுவார்கள்’’ என்றார். ஆனால் நாடு முழுவதும் 10.55 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தை சார்ந்துள்ள நிலையில், மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைப்பு கோடிக்கணக்கான ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

* முதலில் 12 அடுத்து 9 இப்போ 4
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘மோடி அரசின் வறுமை ஒழிப்பு பிரசாரத்தின் உண்மை நிலை என்னவென்றால், முதலில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இருந்த வேலை உரிமை பறிக்கப்பட்டது. இப்போது அவர்களின் ஒருவேளை உணவும் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விறகு அடுப்பிலிருந்து வெளியேறும் புகையிலிருந்து பெண்களை உஜ்வாலா திட்டம் விடுவிக்கும் என மோடி 2016ல் கூறினார்.

அப்போது ஆண்டுக்கு 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது. இப்போது 4 ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. 12 சிலிண்டர் வழங்குவதாக வாக்குறுதி, ஆனால் 4 மட்டுமே வழங்கும் நோக்கம்.

ஏற்கனவே காஸ் சிலிண்டர் விலை மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டதால் 5.56 கோடி பயனாளிகளால் அடுத்த சிலிண்டரை வாங்க முடியாத நிலை உள்ளது. இது தாய்மார்களையும், சகோதரிகளையும் மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. ஆனால் அவர்களின் துயரத்தை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசோ அதிகார போதையில் உள்ளது’’ என்றார்.

Related Stories: