மத்தியப்பிரதேச மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு அதிரடி நிராகரிப்பு

* தெலங்கானா வழக்கு தகவலை மறைத்ததாக பாஜவினர் அளித்த புகாரில் நடவடிக்கை

போபால்: மத்தியப்பிரதேச மாநிலங்களவை தேர்தலில் 3வது இடத்திற்கு மனு செய்து இருந்த காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மனுவை நிராகரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் அந்த அடிப்படையில் 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 230 உறுப்பினர்களைக் கொண்ட மபி சட்டப்பேரவையில் தற்போதைய பலம் 228 ஆகும்.

இதில் பாஜவிடம் 164 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸிடம் 64 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், பாஜ இரண்டு இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் எளிதாக வெல்லும் நிலையில் இருந்தது. இந்த தேர்தலில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோரை பா.ஜ வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், மூன்றாவது இடத்தைக் கைப்பற்றுவதில் குறிவைத்துள்ள பா.ஜ திடீரென காங்கிரஸின் வேட்பாளர் மீனாட்சி நடராஜனை எதிர்த்து பாஜ சார்பில் மகேஷ் கேவத்தை களமிறக்கியது.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்த போது மூன்றாவது ராஜ்யசபா இடத்திற்குப் போட்டியிடும் பாஜ வேட்பாளர் மகேஷ் கேவத், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒரு புகாரை அளித்தார். அதில், தெலங்கானாவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த தகவலை மீனாட்சி நடராஜன் வேண்டுமென்றே மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மபி தேர்தல் நடத்தும் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான குழுவினர் தேர்தல் அலுவலகத்தை அடைந்தபோது, ​​தேர்தல் ஆணையத்தின் பெரும்பாலான அதிகாரிகள் மாலை 6 மணிக்கு மேல் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தகவல்கள் கூறின.

மபி தலைமைத் தேர்தல் அதிகாரி கியானேஷ் குமார் அலுவலகத்தில் இருந்தபோதிலும், காங்கிரஸ் தரப்பிலிருந்து அவரைச் சந்திக்க முன் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னை குறித்து காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் கூறுகையில்,’ மத்தியப் பிரதேசத்தில் முன்பு தேர்தல்களில் தில்லுமுல்லு செய்த பாஜவினர், இப்போது ராஜ்யசபா தேர்தலை சீர்குலைத்துள்ளனர்.’ என்றார்.

* பா.ஜ தரப்பு சொல்வது என்ன?
பா.ஜ வேட்பாளர் மகேஷ் கேவத் தரப்பு வழக்கறிஞர் சங்கேத் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,’ தெலங்கானா நீதிமன்றம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மீது ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. அது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. இதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்.

இந்தத் தகவல் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, பிரமாணப் பத்திரத்தில் இத்தகவலை வழங்குவது கட்டாயமாகும். இதே விதியின் கீழ் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை எதிர்த்து பாஜ வேட்பாளர் மகேஷ் கேவத் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அவரது வேட்புமனுவில் வேறு பல குறைபாடுகளும் கண்டறியப்பட்டன’ என்றார்.

* வழக்கு எதுவும் இல்லை நோட்டீஸ் மட்டுமே வந்தது: காங்கிரஸ் விளக்கம்
காங்கிரஸின் மத்தியப் பிரதேசப் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி கூறுகையில்,’ மீனாட்சி நடராஜன் மீது தெலங்கானாவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவரைத் துன்புறுத்துவதற்காகவே பா.ஜ இத்தகைய வழக்குகளைக் குறிப்பிட்டுள்ளது. தெலங்கானா நீதிமன்றத்திடமிருந்து மீனாட்சி நடராஜனுக்கு ஒரு ஷோகாஸ் நோட்டீஸ் மட்டுமே வந்திருந்தது.

அதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போதுதான் வேட்புமனுவில் தகவல் அளிக்கப்பட வேண்டுமே தவிர நோட்டீஸ் பெறும்போது அல்ல என்பது தேர்தல் ஆணையத்தின் தெளிவான அறிவுறுத்தல் ஆகும். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது’ என்று கூறினார்.

* ஓடு பாதையில் நிறுத்தப்பட்டு திருப்பி வரப்பட்ட விமானம்
மபி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் ஜூன் 18 அன்று வரை பெங்களூரில் தங்க வைக்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அவர்களை தனி விமானத்தில் ஏற்றி போபால் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட தயாராக ஓடுபாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வந்ததும் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் திருப்பி அழைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 230 உறுப்பினர்கள் கொண்ட மபி சட்டப்பேரவையின் தற்போதைய பலம் 228 ஆகும்.
* இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 58 வாக்குகளைப் பெற வேண்டும்.
* இரண்டு இடங்களை வெல்ல பா.ஜவுக்கு 116 வாக்குகள் தேவை. அதன்பிறகு 48 வாக்குகள் உபரியாக இருக்கும்.
* ஆனால், காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜனை எதிர்த்து பா.ஜ வேட்பாளர் மகேஷ் கேவத் ெவற்றி பெற தேவைப்படும் 10 வாக்குகள் பா.ஜவிடம் இல்லை.

Related Stories: