தாது மணல் நிறுவனத்திடம் ரூ.2.78 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்: 12ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.78 கோடி பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக பினராயி விஜயனின் கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகள், வீணா விஜயனின் கணவரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாசின் கோழிக்கோட்டில் உள்ள வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அண்மையில் அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வரும் 12ம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி வீணா விஜயன், சிஎம்ஆர்எல் நிறுவன நிர்வாக இயக்குனர் சசிதரன் கர்த்தா, இணை நிர்வாக இயக்குனர் சரண், தலைமை பொது மேலாளர் சசிகுமார் உள்பட 9 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: