6வது ஆண்டு நினைவேந்தல் சேதுராம பாண்டியன் சிலைக்கு மரியாதை

கேடிசிநகர், மார்ச் 7: நெல்லையில் சேதுராம பாண்டியனின் 6வது நினைவேந்தலையொட்டி அவரது சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் சார்பில் அதன் நிறுவனர்  சேதுராம பாண்டியனின் 6ம் ஆண்டு நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தில் உள்ள சேதுராம பாண்டியன் நினைவாலயத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் மூர்த்தி தேவர், சேதுராம பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், மாநகரச் செயலாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, திமுக வக்கீல் அணி ஏஎல்பி தினேஷ், இளைஞரணி வேல்ராஜா, சுதா மூர்த்தி, மல்லிகை சீனிவாசன், குண்டுபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசுப்பு, துணை பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், அமைப்புச் செயலாளர் மாரிதேவர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் முருகன், பாலுத்தேவர், கோவை மாவட்டச் செயலாளர் முருகத்தேவர், வக்கீல் அணி மாநில செயலாளர் செல்வதனேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

“அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்கு கிடையாது”

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் மூர்த்தி தேவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மத நல்லிணக்கத்திற்கு பாடுபட்ட சேதுராமபாண்டியன் வழியில் எழுச்சியோடு செயல்பட்டு  வரும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம், கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி, ஒரு குறிப்பிட்ட  சமூகத்திற்கு அதிகளவில் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு எங்களது சமூகத்தை  புறக்கணித்துள்ளார். மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய,  மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை. அத்துடன் எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. எனவே, ஏப்.6ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோரின் வாக்கு  அதிமுகவுக்கு கிடையாது. இத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து வரும் 11,12ம் தேதிகளில் நெல்லையில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: