திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கேக்கரை பகுதியில் ராமர் பாதம் பட்ட இடமான சிவன் கோயில் குளக்கரையில் இருந்து வரும் மண்டபத்தை புதிதாக கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் இருந்து வரும் கேக்கரையில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்து வருகிறது. ராமர் பாதம் பட்ட இடமாக இருந்து வரும் இக்கோயிலானது காசிக்கே வீசம் என்ற ஐதீகத்துடன் விளங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் குளக்கரையில் ராமர் தனது தந்தையான தசரதனுக்கு 16ம் நாள் இறுதி காரியம் செய்ததாக வரலாறு கூறுவதால் இந்த குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு 16ம் நாள் காரியம் செய்வதற்காக திருவாரூர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மட்டுமின்றி சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த குளக்கரையினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று 16ம் நாள் காரியம் செய்வதற்காக இந்த குளக்கரையினை ஒட்டியவாறு நகராட்சி சார்பில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுலா வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் குளியலறையுடன் கூடிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தது. பின்னர் குறுகிய ஆண்டுகளிலேயே இந்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் தரைதளம் சேதம் போன்றவை காரணமாக இந்த கட்டிடத்தில் தற்போது 16ம் நாள் காரியம் என்பது சரிவர நடத்த முடியாமல் கட்டிடத்தின் ஒரு மூலையில் மட்டுமே அமர்ந்து காரியம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.
மேலும் இந்த கட்டிடத்திற்காக அமைக்கப்பட்ட போர்வெல் மற்றும் மின் இணைப்பு போன்றவையும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்துடன் உரிய பாதுகாப்பு இன்றி இந்த கட்டிடம் இருந்து வரும் நிலையில் இந்த அபாயத்தினை அறியாமல் மது பிரியர்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் வரையில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவதுடன் அந்த மது பாட்டில்களை அதே இடத்திலும் மற்றும் குளத்திற்குள்ளும் வீசி செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே ராமர் பாதம் பட்ட இடம் மட்டுமின்றி தனது தந்தைக்கு 16ம் நாள் காரியம் கொடுத்த இடமாகவும் காசிக்கே வீசம் என்ற ஐதீகத்துடனும் இருந்து வரும் இந்த கேக்கரை குளக்கரையில் சேதம் அடைந்துள்ள கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகம் புதிதாக கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி 16ம் நாள் காரியத்திற்காக வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
