உக்ருல்: மணிப்பூரில் புதிய ராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர். மணிப்பூரில் கடந்த மே 13ம் தேதி காங்போக்பி மற்றும் நோனி மாவட்டங்களில் நடந்த இரட்டை பதுங்கித்தாக்குதலில் 3 தேவாலய நிர்வாகிகள் உட்பட 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 48 பொதுமக்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சிலர் பிணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த மே 29ம் தேதி இம்பால் – நாகாலாந்து தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒரு போலீசார் காயமடைந்தார். இந்தச் சம்பவங்களால் உக்ருல் மாவட்டத்தில் ஏற்கனவே பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் உக்ருல் மாவட்டத்தின் நியூ ஹெவன் கிராமத்தில் லம்புய் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், கிராம அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் புதிய அவுட்போஸ்ட் அமைக்க முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியதில் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 4 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
