டெல்லி போராட்டம் வெறும் டிரைலர் ஒன்றிய கல்வி அமைச்சர் 7 நாளில் பதவி விலக வேண்டும்: கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் கெடு

புதுடெல்லி: வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி குழு உருவானது. ஏராளமான இளைஞர்கள் இக்குழுவில் இணைந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முன்தினம் முதல் முறையாக போராட்டம் நடந்தது. நீட், சிபிஎஸ்இ, கியூட், எஸ்எஸ்இ தேர்வுகளில் நடந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடந்த இப்போராட்டத்தில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
நேற்று, நாங்கள் ஆயிரக்கணக்கானோர் வரலாறு படைத்தோம். ஜந்தர் மந்தரில் நாங்கள் நடத்திய அமைதியான போராட்டம், கரப்பான் பூச்சிகளால் என்ன செய்ய முடியும் என்பதற்கான டிரைலரை அரசுக்கு உணர்த்தியது.
போராட்டத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் இதற்கு முன் எந்த போராட்டத்திலும் பங்கேற்காதவர்கள். கல்வி அமைப்பின் மீதான கடும் கோபம், விரக்தியை வெளிப்படுத்த ஒன்று கூடியதும் அவர்கள் துணிச்சல் பெற்றுள்ளனர். கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், குழந்தைகள் உட்பட ஆதரவாளர்களுக்கு நன்றி.

நமது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் மாற்றம் நிகழாது. இது இத்துடன் முடிந்து விடாது. ஒரு முழு தலைமுறைக்கும் அநீதி இழைத்து விட்ட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடுத்த 7 நாளில் பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களின் ஒன்றிணைந்த, அமைதியான இயக்கத்தை அரசால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களை கண்டு கரப்பான்பூச்சிகளாகிய நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டம்
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று காலை வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அளித்த பேட்டியில், ‘‘டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து எங்களின் இயக்கம் நாடு முழுக்க விரிவடையும். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அடுத்த எங்கள் போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறும்’’ என்றார். தீப்கே வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: