அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுகொலை: பீட்சா டெலிவரி செய்ய சென்ற போது மர்மநபர்கள் வெறிச்செயல்

ஐதராபாத்: அமெரிக்காவில், பீட்சா டெலிவரி செய்ய சென்ற இந்திய வாலிபர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். தெலங்கானா மாநிலம், குண்ட்லாபோச்சம்பள்ளியை சேர்ந்தவர் அன்ஷூல் குன்ஞ்சா(28). இவர் முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றார். தனது படிப்பை முடித்த பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கூடுதல் வருமானம் பெறுவதற்காக வாரத்தின் இறுதி நாட்களில் பீட்சா டெலிவரி செய்யும் பணியை செய்து வந்தார். கடந்த 5ம் தேதி இரவு ஒதுக்குபுறமான இடத்தில் பீட்சா டெலிவரி செய்யும்படி அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்ற போது மர்மநபர்கள் அன்ஷூலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அன்ஷூல் பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்ஷூலின் சகோதரி தன்வி கூறுகையில்,அன்ஷுல் நள்ளிரவு 12.30 மணிக்கு பீட்சா டெலிவரிக்காக அந்த வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டிற்கு அருகில் சென்ற நேரத்தில், முகமூடி அணிந்த நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் அன்ஷுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரிடம் இருந்து எந்த பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை. கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றார்.அன்ஷூல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories: