எஸ்ஐஆர் பணியின் போது சந்தேக வெளிநாட்டினர்களின் விவரங்களை பகிர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: எஸ்ஐஆர் பணியின் போது சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் தொடர்பான விவரங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) மூன்றாம் கட்ட பணிக கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி பல்வேறு கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநில தலைமை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் விரிவான அறிவுறுத்தல்களை அனுப்பி உள்ளது.

அதில், ‘கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்படாத வாக்காளர்கள் விவகாரத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அருகில் உள்ள வாக்காளர்களிடம் விசாரித்து, சம்மந்தப்பட்ட நபர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்களா, வேறு இடத்திற்கு மாறிவிட்டார்களா என்பது குறித்தும் இறந்து போயிருத்தல், இரட்டை பதிவு போன்ற காரணங்களை கண்டறிந்து அதை பதிவு செய்ய வேண்டும். தேர்தல் பதிவு அதிகாரிகள், எஸ்ஐஆர் பணியின் போது கண்டறியப்படும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் தொடர்பான விவரங்களை, 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் கீழ் உரிய அதிகாரிகளிடம் பகிர்ந்து சரிபார்க்க வேண்டும்.

வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளும் பயன்படுத்தி, இத்தகைய சந்தேக விவகாரங்களை மேல்நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கலாம்’ என தெரிவித்துள்ளது.

Related Stories: