தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

தாம்பரம்: தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மார்க்கத்தில், தினமும்  மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கு என தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 8 மணியளவில், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், தாம்பரம் அருகே உள்ள சிக்னல் திடீரென பழுதடைந்தது. இதனால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து தாம்பரம் ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்களுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பழுதடைந்த சிக்னலை சரி செய்தனர். இதனையடுத்து, காலை 10 மணியளவில், பழுதடைந்த அனைத்து சிக்னல்களும் சரி செய்யப்பட்டன.

இதன் காரணமாக. தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், சுமார் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு மார்க்கமாக, பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த ஏராளமானோர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்றனர். இதையொட்டி, தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>