மணப்பாறையில் குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை, மார்ச் 6: மணப்பாறையில் முறையான குடிநீர் விநியோகம் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணப்பாறை நகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட அண்ணாவி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி மூலம் காவிரி குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அப்பகுதி குடிநீர் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலைகளில் வழிந்தோடியதாகவும், அதன் காரணமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் அலட்சியப்போக்குடன் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திருச்சி சாலை மாரியம்மன் கோயில் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அவ்வழி சாலை போக்குவரத்து முழுவதும் முடங்கி வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அவர்களுடன் அப்பகுதி குடியிருப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் உடனடியாக பழுதடைந்துள்ள குழாய் பகுதியினை சீர் செய்து குடிநீர் விநியோகம் முறையாக அளிப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>