திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறை சீரமைக்கும் பணி துவக்கம்

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 6: திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையை தினகரன் செய்தி எதிரொலியாக சீர்படுத்தும் பணி துவங்கியது. திருக்காட்டுப்பள்ளியில் நாயன்மார்களால் பாடல் பெற்ற சவுந்தநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாதம் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாட்களில் சுவாமி வீதி உலாவாக வந்து காவிரி ஆற்றின் படித்துறையில் இறங்கி தீர்த்தவாரி நடைபெறும். அப்போதும் மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகிழ்வார்கள். இக்கோயிலில் நடைபெரும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடுவார்கள். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி நிர்வாகம், இறந்தவர்களுக்கு காரியங்கள் செய்ய என்று காவிரிகரையில் படித்துறைக்கு கிழக்கே தனியாக ஒரு கட்டிடம் கட்டி தந்துள்ளது.

அதனை யாரும் பயன்படுத்தாமல் காவிரி ஆற்றின் படித்துறையிலேயே காரியங்களை செய்ய தொடங்கி விட்டனர். தற்போது புனித இடமாக காக்கப்பட வேண்டிய காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டம் போட்டு இறந்தவர்களின் சடங்குகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவிரி ஆற்றின் புனிதம் காக்கவும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் காவிரி படித்துறை வளாகம் முழுவதும் குப்பைகள், மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் செயல் அலுவலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சேதமான படித்துறை பகுதிகளை சீர்படுத்தவும், காவல்துறையினரிடம் மது அருந்தும் குடிமகன்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார். இறந்தவர்களுக்கு காரியங்கள் படித்துறையில் செய்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து அறிவிப்பு பலகை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தினகரன் நாளிதழ் செய்தியால் நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தினகரன் நாளிதழை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: