சிறையில் நோயுடன் போராடும் கைதிகள்

கோவை, ஜூன் 8: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 14 மாவட்ட சிறை, 318 கிளை சிறைகளில் சுமார் 21 ஆயிரம் கைதிகள் உள்ளனர். கைதிகள் சிலர் காச நோய், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சிலர் எச்ஐவி பாதிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது. சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் சிலர் சிறையில் நோய் பாதிப்பில் இறந்து விடுகின்றனர். சிறையில் நோயாளிகளை கண்டறிய அவர்களுக்கு உரிய சிகிச்சை தர நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிறை மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதில்லை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தீவிர நோய் பாதிப்பில் உள்ள கைதிகளை சேர்த்து சிகிச்சை தர வலியுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக வயதான நோய் பாதிப்பில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சையில் முக்கியத்துவம் வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு கூட போதுமான வசதிகள் இல்லை. கைதிகள் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டிற்கு வரவேண்டியுள்ளது. திருப்பூர், ஈரோடு சிறையில் உள்ள கைதிகள் சிலர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. தினமும் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய நோயாளிகளுக்கு சிறையில் உரிய அளவில் மாத்திரை கிடைப்பதில்ைல என கூறப்படுகிறது. கண் தெரியாமல், மன நிலை பாதிப்பில் சில கைதிகள் இருப்பதாக தெரிகிறது. நோய் பாதிப்பில் இருக்கும் கைதிகளை சிறை நிர்வாகம் அலட்சியமாக கையாள்வதாக தெரிகிறது. சிகிச்சை பெற அனுமதி கேட்டு ஏராளமான கைதிகள் காத்திருக்கின்றனர். நோயாளிகளை மீட்டு சிகிச்சை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு நோய் தன்மை அடிப்படையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: