கோவை,ஜூன்6: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி இயற்பியல், கணிதம், பி.காம் உள்பட 23 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், மொத்தம் 1,727 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 19,483 ஆண்கள், 17,894 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் என மொத்தம் 37,398 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்திற்கு 8,763 பேரும், பிபிஏ 8061 பேரும், தமிழ் 7,631 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களது தரவரிசை பட்டியல் கல்லூரியின் gacbe.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், விளையாட்டு பிரிவில் 52 இடங்கள், மாற்றுத்திறனாளி 86, முன்னாள் ராணுவீரர் மற்றும் அவர்களது வாரிசுகள் பிரிவில் 9 இடங்கள், அந்தமான், நிக்கோபார் சேர்ந்தவர்களுக்கு 2 இடங்கள், என்சிசி பிரிவில் ஒரு இடம் என மொத்தம் உள்ள 150 இடங்களுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், நேற்று நடந்த கவுன்சலிங்கில் மொத்தம் 77 இடங்கள் நிரம்பியது. 73 இடங்கள் காலியாக உள்ளது. இதையடுத்து, வரும் 8ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில், மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.
