ஈரோடு,ஜூன்8: ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருவதால், தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். ஈரோட்டில் அமைந்துள்ள சிக்கய்ய கல்லூரி, கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகும். 150 மாணவர்களுடன் துவக்கப்பட்ட இக்கல்லூரியானது, 70 ஆண்டுகளில், 1,400 மாணவர்கள் பயிலக்கூடியதாகவும், பட்ட மேற்படிப்புகளை வழங்குவதாகவும், ஆராய்ச்சி நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது. இக்கல்லூரியில், தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, வணிகவியல், பொருளியல், இயற்பியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, கணிதவியல், மேலாண்மையியல் என 13க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, 3 முதுகலைப் படிப்புகளும், பட்டைய படிப்புகள், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி திட்டங்களைக் கொண்டுள்ளது.
கடந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் தீவிர முயற்சியால் கடந்த 11.3.2025 அன்று, சிக்கய்யா கல்லூரி அரசுக்கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு போக மீதமுள்ள இடத்தில் பெரிய நூலகம், ஐஏஎஸ் அகாடமி, மைதானம் வர வேண்டும் என அனைவரின் விருப்பமாக இருந்தது. தொடர்ந்து, தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் அரசு தேர்வுக்கு தயாராகும் வகையிலும், ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.9.40 கோடி மதிப்பீட்டில் ஐஏஎஸ் பயிற்சி மையம், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் கட்டுமான பணிகளை, கடந்த திமுக அரசு துவக்கி வைத்து, அப்பணிகளை துரிதப்படுத்தியது. இதனால், தனியார் ஐஏஎஸ் மையங்களில் பணம் கட்ட முடியாமல் தவித்து வந்த மாணவர்கள், ஐஏஎஸ் பயிற்சி மையத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, ஐஏஎஸ் பயிற்சி மையம் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால், ஐஏஎஸ் பயிற்சி மையம் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஐஏஎஸ் கனவோடு காத்திருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் கருதியும், தந்தை பெரியாரின் கனவை நினைவாக்கும் வகையிலும், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அரசு செய்த பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம். ஏழை,எளிய, நடுத்தர மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமின்றி பணிகளை செய்ய வேண்டும். ஆட்சியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி மாணவர்களை பழிவாங்கக்கூடாது. எனவே, ஐஏஎஸ் கனவோடு காத்திருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் கருதி, கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
