வாரணாசி: பாஜ ஆட்சி செய்யும் உபி மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் மோடி உள்ளார். இந்த நிலையில் வாரணாசி மாநகராட்சியின் ஆட்சி குழு கூட்டம் மேயர் அசோக் குமார் திவாரி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற சந்தை பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், நெரிசலை குறைக்கவும், பொது சுகாதாரம் குறித்த பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை புறநகர் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் ஹிமான்சு நாக்பால், வாரணாசியில் 350 முதல் 400 இறைச்சி, மீன் கடைகள் உள்ளன. முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 இடங்களுக்கு சில கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என்றார்.நகரப்பகுதிக்குள் இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, கடை உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் மீன் இறைச்சி வாங்க பல கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டுமா? என்று பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
