நாகை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரின் உருவபொம்மையை எரித்து நாகப்பட்டினம் விவசாயிகள் போராட்டம் செய்தனர். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழக விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவின் முழு தண்ணீர் தேவையும் பூர்த்தியான பிறகே தமிழகத்திற்கு காவிரி உபரி நீர் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் வறண்டு போகும் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்படும்.
எனவே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக புதிய முதல்வர் சிவகுமார் அழுத்தமாக கூறி வருகிறார். ஆனால் தமிழகத்தின் புதிய முதல்வரான விஜய்யோ இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அல்லது பிற அமைச்சர்களை வைத்து கூறுவதோடு சரி, வெளிப்படையாக கருத்து அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.
இது விவசாயிகளை கொந்தளிக்க செய்துள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டம் பனங்குடியில் விவசாயிகள் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயைக் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அதே போல தங்களின் வாழ்வாதார பிரச்சனையில் தவெக அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பதாக கூறி முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் போராட்டத்தின் போது கண்டனம் தெரிவித்தனர்.
