சென்னை: ஜி ராம் ஜி திட்டதின் கீழ் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு 12,698 கோடியில் இருந்து தற்போது வெறும் ரூ.3,923 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஆனால், உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு ஓரம் கட்டி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளன. ஆனால் தமிழக அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்று அழைக்கப்பட்டும், பொதுமக்களிடம் பரவலாக நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம் என அறியப்பட்டு வந்ததின் பெயரையும் அதன் பழைய கட்டமைப்புகளையும் மாற்றி நாடாளுமன்றத்தில் ‘ஜி ராம் ஜி’ திட்டம் என்ற ஒரு வரைவு சட்டம் பாஜ அரசு கொண்டு வந்து இரு அவைகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றின. இதனை பல மாநிலங்களில் ஆளும் கட்சியினர் எதிர்த்தனர். குறிப்பாக, தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜன.23ம் தேதி சட்டப்பேரவையில் இத்திட்டத்தினை எதிர்த்து தனி தீர்மானத்தை நிறைவேற்றினார். இது அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டைப் போலவே பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களும் இப்புதிய சட்டத்திற்கு எதிராகத் தங்களின் சட்டமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றின. சுருக்கமாக கூறினால், தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாநிலத்தின் நிதி உரிமையை நிலைநாட்டவும் ஒன்றிய அரசுக்கு எதிராக தன் வலுவான சட்டப்பூர்வ எதிர்ப்பைச் சட்டமன்றத்தின் வாயிலாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதிவு செய்தன. தற்போது இந்த ஜி ராம் ஜி சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்குக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.
அந்தவகையில் 16வது நிதி ஆணைய பரிந்துரையின் படி மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு திருத்தி அமைக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு தற்போது அனுப்பிய வரைவு அறிக்கை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது. அதில் ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கும் ஒட்டுமொத்த நிதி ரூ.95,692 கோடியில் தமிழத்திற்கு வெறும் ரூ.3,926 கோடி மட்டும் கிடைக்க உள்ளன.
2023-24-ம் ஆண்டில் 12,698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 3,923 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்கும் ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரே அடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்த தரவுகள் காட்டுகின்றன. இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளன.
ஆனால் பாஜக ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி 6.10 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமும், மராட்டிய மாநிலத்திற்கு நிதி 3.99 சதவீதத்திலிருந்து 6.44 சதவீதமும், குஜராத்துக்கு அளிக்கப்படும் நிதி 1.49 சதவீதத்தில் இருந்து 3.76 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிலுவை தொகையான ரூ.4,034 கோடியை (கூலி மற்றும் பொருட்கள் பங்கு) ஒன்றிய அரசு நீண்ட நாட்களாகத் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் இழுத்தடித்தபோது திமுக சார்பில் மாநிலம் தழுவிய பிரமாண்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. கல்வி நிதியை சமக்ர சிக்ஷா அபியான் முடக்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியைத் தராமல் தாமதிப்பது, மற்றும் வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் தகுந்த பங்களிக்காமல் புறக்கணிப்பது எனப் பல்வேறு தளங்களில் ஒன்றிய அரசு காட்டும் ‘‘தாய்மாமன் அல்ல, மாற்றாந்தாய் மனப்பான்மையை” மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ஒன்றிய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு, தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை எளிய மக்களின், குறிப்பாகப் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இப்புதிய ஜி ராம் ஜி சட்டத்தை எதிர்த்து, மற்ற தென் மாநிலங்களை ஒன்றிணைத்து தமிழக முதல்வர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவாரா? அல்லது விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது போல, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழகம் தழுவிய பிரம்மாண்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்த கருத்தும், நிலைப்பாட்டையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
