சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: மே 16, 17 ஆகிய நாட்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலம் : ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

 

சென்னை: தமிழக மின்வாரியத்தில் ரூ.397 கோடி மதிப்பில் 45 ஆயிரம் மின்மாற்றி வாங்குவது தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மின்வாரியத்தில் 2021-23ம் ஆண்டு காலத்தில் 45 ஆயிரம் மின்மாற்றிகள் ரூ.397 மதிப்பிலான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையில் டெண்டர் கோரியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.397 கோடி டெண்டர் மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 45 ஆயிரம் மின்மாற்றி கொள்முதல் தொடர்பான ரூ.397 கோடி டெண்டர் கோரிய ஒப்பந்த நிறுவனங்களின் விபரங்கள், அதற்கான கோப்புகள், எந்த நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. அதற்காக அரசு நிர்ணயித்த விலை என்ன? என்பது தொடர்பாக விபரங்களை சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், சிபிஐ இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை துறையின் கண்காணிப்பில் இருந்த ரூ.397 கோடி டெண்டர் தொடர்பான கணினியில் பதிவு செய்யப்பட்ட 18 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ள முக்கிய கோப்புகளின் பக்கங்கள் அனைத்தும் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்தில் பணியாற்றும் 8 உதவிப் பொறியாளர்கள், உதவிச் செயற் பொறியாளர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகள் மூத்த தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார்களை அளித்தனர்.

அதன்படி மின்வாரிய தலைமையகம் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் டிஜிபி ஆயுஷ் மணி திவாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தலைமை அலுவலகத்தில் உள்ள 4,5, 7 மற்றும் 10வது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கோப்புகள் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில் டெண்டர் தொடர்பான கோப்புகள் மற்றும் கணினியில் உள்ள ஹார்டு டிஸ்க்குகள் மாயமான தளத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே பழுது காரணமாக அகற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மின்வாரிய ஊழல் தடுப்பு பிரிவு ஒரு பக்கம் விசாரணை நடத்தி வந்தாலும், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருட்டு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி சிந்தாத்திரிப்பேட்டை போலீசார் பிஎன்எஸ் 305 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில் ரூ.397 கோடி மதிப்பிலான டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கோப்புகள் கடந்த மே மாதம் 3வது வாரத்தில் சனிக்கிழமை (16ம் தேதி) மற்றும் ஞாயிற்று கிழமைகளில்(17ம் தேதி) இந்த திருட்டு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் உயர் அதிகாரிகள் மட்டத்தில் அலுவலகத்திற்கு யாரும் வரவில்லை என்றும், இதனால் குறைந்த ஊழியர்கள் தான் அன்றைய தினம் பணிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த மே 16 மற்றும் 17ம் தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு பணிக்கு வந்த அனைவரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த ஊழியரை மட்டும் போலீசார் பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட கணினியில் இருந்த ஹார்டு டிஸ்க்கள் திருடிவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதப்படி அதற்கு பதில் வேறு ஒரு ஹார்டு டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மின்வாரியத்தில் கணினி பராமரிக்கும் பிரிவை சேர்ந்த முக்கிய ஊழியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருக்கும் நிலையில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கோப்புகள் மாயமானது மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: