அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள்: மதுரையில் பரபரப்பு

 

திருப்பரங்குன்றம்: தமிம்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து தற்போது ஒரங்கட்டப்பட்டுள்ளார். கட்சி தலைமை மீதான அதிருப்தியில், அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று மாலை அண்ணாமலை அவசர, அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து திரும்பும் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு பெற உள்ளதாகவும், அதன்பிறகு, புதிய கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அண்ணாமலை-ரஜினிகாந்த் படங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையின் ஆதரவாளர் ஒருவர் (ஆர்.விஷ்ணு பிரசாத்) பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பூங்கொத்து கொடுப்பது போல படம் இடம் பெற்றுள்ளது. மேலும், ரஜினிகாந்த் நடித்த `அருணாச்சலம்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும், `சிங்கம் ஒன்று புறப்பட்டதே…’ என்ற பாடல் வரிகளும், பிறந்தநாள் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: